Thursday, March 17, 2011

எனது கிறுக்கல்கள் - பாகம் 2

நான் என் மனதில் கிடந்த பழைய குப்பைகளை கிளறியதில், என் மனம் என்னும் குழந்தை கிறுக்கிய சில கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு.

1 ) கோடி முறை யோசித்தும் தாயிற்கு நன்றி கூறவும், தாய்க்கு இணையான ஒரு வார்த்தையையும் எந்த மொழியில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

2 ) கருநிற மனிதனின் உழைப்பில் உதிர்ந்த வேர்வை துளிகளின் உண்மையான கூலி, வெண்ணிற மனிதன் வாழும் நாட்டின் வங்கி பாதுகாப்பு அறையில் குளிர் காய்கிறது.

3 ) பிறந்ததில் இருந்து தொடர்ந்து புகைத்து வந்த புகைவண்டி கூட தன்னையும் தன் சுற்றத்தையும் பாதுகாத்து தொடர்ந்து வாழ, தன் புகை பழக்கத்தை காலமாற்றத்தில் மறந்து விட்டு தொடர் வண்டியாக வாழும் பொழுது, அதனுள் பயணிக்கும் மனிதன் ஏன் இன்னும் புகைத்து வருகிறான்!

4 ) உணவுப்பாத்திரத்தில் ஓட்டை விழுந்தால் உன் வீட்டுக்கு உணவில்லை, ஓசோனில் ஓட்டை விழுந்தால் உன் நாட்டிற்கே உணவில்லை.

5 ) தன்னை தரம் தாழ்த்திக்கொண்டும் தனக்கு வரும் பாதிப்பை எல்லாம் பொறுத்துக் கொண்டும், இறுதியில் தன்னை இவ்வளவு சித்ரவதை செய்தவர்களையே தன் தலை மேல் வைத்துக் கொண்டாட செய்வதுதான் தங்கத்தின் திறமை.

6 ) அது என்ன அவளைப் பார்த்த அந்த நொடி பொழுது ஒளியின் வேகத்தை விட வேகமாக என்னுள் காதல் மலர்கிறது!

7 ) தள்ளாடியபடி தண்ணிரின் மேல் சரக்குடன் செல்லும் சரக்குக் கப்பலே இறுதியில் தன் இலக்கிற்கு தெளிவாக செல்லும் பொழுது, மனிதன் மட்டும் ஏன் சரக்கடித்து விட்டுத் தன் தடம் மாறிச் செல்கிறான்.

8 ) தன் பசிக்காக அல்லாமல் ருசிக்காக சாப்பிடும் இவர்களுக்கு பசியாற்ற தன் உயிரை துச்சமாக எண்ணி இருசக்கர வாகனத்தில் பிட்சா எடுத்து செல்லும் இவருக்கு உள்ள அக்கறை, ஏன் என் நாட்டின் உள்ள ஏழைகளின் பசி ஆற்ற இந்த நாட்டின் தலைவர்களுக்கு இல்லை.

9 ) பட்டினியால் இறப்பவர்கள் இந்த நாட்டில் அதிகரித்தால், பின் வரும் சமுதாயம் "மனிதம் நிறைந்த மனிதர்கள்" என்ற ஒரு இனம் வாழ்ந்தது என்று கூறும் நிலை உருவாகும்.

10 ) தொழில்நுட்ப அறிவு வளர்ந்த இக்காலத்தில் செயற்கையாக இதயத்தை பொறுத்தினாலும், அதனுள் மனம் என்னும் மனித மாண்பை செயற்கையாக எவராலும் பொறுத்த இயலாது.

இது வெறும் தொடக்கம் தான், இன்னும் என் மனம் கிறுக்கும் கிறுக்கல்கள் முடியவில்லை...

எனது கிறுக்கல்களின் பாகம்-1 பார்க்க இங்கே சொடுக்கவும்

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

Monday, March 14, 2011

சொல்ல மறந்த காதல் - சிறுகதை

"இந்த கதை மற்றும் கதையில் வரும் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே, யார் மனதையும் புண்படுத்த அல்ல"

இடம் : வாக்கோ(Växjö) தொடர்வண்டி நிலையம்
நாள் : நேற்று முன்தினம்
நேரம் : வெண்பனி போர்வையில் உள்ள ஓட்டையின் வழியே மெல்ல மெல்ல சூரிய கதிர்கள் எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்த காலை நேரம்

குளிர் தன் உக்கிரத்தை -15 டிகிரி மூலம் காண்பித்து வரும் அதே வேளையிலும் பரபரப்பாக எப்போதும் மக்கள் சென்று வந்து கொண்டிருந்த காலை வேளை அது, தன் வழித் தடங்களை மறைத்து இருந்த பனி குவியல்களை இரண்டு புறங்களும் வாரி இறைத்தப்படி தொடர்வண்டி நிலையத்துள் தன் வேகத்தை சிறிது சிறிதாக குறைத்து உள்ளே நுழைந்தது ஸ்வீடனின் அதிவேக "Intercity" தொடர்வண்டி. அதில் இருந்து இறங்கிய சிலருள் ஒருவனாக தனது மடிகணினி பையுடுன் நெடுமாறன் இறங்கினான். நெடுமாறன், தற்போது போரஸ்(Borås) பல்கலைக்கழகத்தில் தான் பயிலும் மேற்படிப்பு போதாதென்று மேற்கொண்டு வாக்கோ(Växjö) பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து கிடைத்த மற்றுமொரு மேற்படிபிற்காக தன்னை பதிவு செய்து கொள்வதற்காக இப்பொழுது இங்கு வந்து உள்ளான். இறங்கியவுடன் தான் அணிந்து இருக்கும் குளிராடைகளையும் தாண்டி குளிர் தன்னை மெல்ல மெல்ல நடுங்க வைக்க தொடங்குவது அறிந்து கொண்ட நெடுமாறன் அங்கு உள்ள ஓய்வறையில் தன் நண்பன் அசோகிற்காக காத்திருக்க சென்றான். அசோக், இவனுடன் பள்ளியிலிருந்து ஒன்றாக பயின்று வரும் நண்பன், அவனின் உதவியால் தான் ஸ்வீடனின் இலவச கல்வி பற்றி அறிந்து இங்கு வந்து தற்போது போரஸ்(Borås) பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறான். நெடுமாறன் கல்வி பயின்று முடித்து தன் தாய்நாட்டில் வேலைத்தேடி வீணாக்கிய அதே நேரத்தில் அசோக் இங்கு வந்து ஒரு வருட கல்வியை முடித்து விட்டான்.



பொதுவாக ஸ்வீடனில் எந்த தொடர்வண்டி நிலையத்திலும் ரயில் வரும் 15 நிமிடமும் சென்ற 15 நிமிடமும் தான் மக்கள் கூட்டம் இருக்கும், அதேப்போன்று, ரயில் ஒரு நிமிடம் கூட தாமதமாக வருவதோ செல்வதோ பெரும்பாலும் நடக்காத ஒன்று. ஆகையால் இவன் இன்று சரியான நேரம் வந்த ரயிலில் வந்திறங்கி காத்திருக்கும் பொழுது, நேரம் சிறிது சிறிதாக கடக்க ஒவொருவராக குறைந்து நெடுமாறன் மட்டும் தனியாக தொடர்வண்டிநிலைய ஒய்வரையில் காத்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது அவன் கைபேசிக்கு வந்த குறுந்தகவலில், நான் வர்ற கொஞ்ச நேரம் ஆகும், இப்போதான் வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளேன் என்று அசோக் தெரிவிக்க, தன் மடிகணினி பைலிருந்து தனது "MP3-PLAYER" எடுத்து இளையராஜாவின் காதல் பாடல்களை கேட்டு ரசித்து கொண்டபடி தன் எதிர் இருந்த பேருந்து நிலையத்தை கண்ணாடியின் வழியாக அசோக் வரவிற்காகக் காத்துக் கொண்டு இருந்தான்.



அப்பொழுது அங்கு பேருந்தில் செல்ல வந்திருந்த ஒரு காதல் ஜோடிகள் தங்கள் பிரிவை தெரிவிக்கும் வகையில் உதட்டோடு உதடாக முத்ததை பரிமாறி கொள்வதை பார்த்தவுடன் இவனின் பழைய ஒருதலை காதல் நினைவுகள் இவனின் உள்ளத்தில் பறந்தோடியது. இவன் இளநிலைக் கல்வியை கல்லூரியில் பயின்று வரும் காலங்களில் இவனுடன் பயின்ற சில அழகான பெண்களில் காயத்ரியும் ஒருத்தி. பல முறை முயற்சி செய்தும் தனக்கு அப்பொழுது தைரியம் இல்லாமையாலும் தன் பொருளாதார நிலையாலும் கடைசி வரை தன் காதலை அவளிடம் இவன் தெரிவிக்கவில்லை. அதை இன்று நினைத்தும் பெரிதும் வருந்தும் இவன், தற்போது ஸ்வீடன் வாழ்க்கை தனக்கு தந்த தைரியமும் பகுதிநேர வேலையில் கிடைத்த நல்ல பொருளாதார சூழ்நிலையாலும் தன் மேல்படிப்பை முடித்து தாயகம் செல்லும் பொழுது அவளை கண்டிப்பாக தேடி பிடித்து அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் குறியாக உள்ளான்.

சிறிது நேரத்தில் மீண்டும் அவன் கைபேசிக்கு வந்த குறுந்தகவலில் "நீ எங்கடா இருக்க, நான் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வெயிட் பண்றேன்" என்ற செய்தி அசோகிடமிருந்து வர, இவனும் அங்கு அவனை பார்க்க சென்றான். அங்கு அசோக், டேய் மாறா நான் இங்க இருக்கேன்னு நெடுமாறனை சத்தம்போட்டு அழைக்க இரு நண்பர்களும் தங்களின் பலநாள் பிரிவை வெளிபடுத்தும் வகையில் கட்டியணைத்துக் கொண்டனர்.

பின்னர், ஏன்டா உன்னை எப்ப வர சொன்னா இப்போ வர, ரயிலு இங்க வந்து போயி எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா என்று நெடுமாறன் அசோகிடம் கேட்க. அதற்கு அவன் இல்லடா அலாரம் வெச்சு தான் துங்கினேன் ஆனா நல்லா துங்கிட்டேன், சரி அப்புறம் எப்புடி இருக்க, எதாச்சும் பொண்ணு இங்க வந்த அப்புறம் உசார் பண்ணியா என்று அசோக் கேட்க. இல்லடா நம்ம ஊருக்கு போயி நம்ம ஊர் பொண்ணையே பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான், இவங்க கலாச்சாரம் நமக்கு ஒத்து வராது சாமி, சரி இப்போ எப்படி உங்க வீட்டுக்கு போறது என்று நெடுமாறன் கேட்டு முடிக்க. அதற்கு அசோக் இதோ இந்த பஸ்ல தான் என்று தான் வந்த பேருந்தை காண்பித்தான். பிறகு இருவரும் பேருந்து ஏறி சில நேர பயணதிற்கு பிறகு அசோக் தங்கி இருக்கும் விடு இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பேருந்தில் இருந்து இருவரும் இறங்கிய பின் பேருந்து அங்கு இருந்து செல்ல, எதிர் புறம் உள்ள அமைதியான பனிப்படர்ந்த காட்டுவழியில் இருவரும் பேசிக்கொண்டு நடக்க தொடங்கினர்.



சரி இப்போ உன் விட்டுக்கு போலாமா இல்ல நேரா கல்லூரி போயிடலாமா என்று நெடுமாறன் கேட்க, இல்லடா வீட்ல இருந்து அஞ்சு நிமிஷத்தில கல்லூரி போயிடலாம் அதனால முதல என் வீட்டுக்கு போயி சாப்டுட்டு அப்புறம் கல்லூரி போலாம், அப்படியே அறிமுக வகுப்பெல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு சாந்திரம் வந்துடு என்று அசோக் பதில் அளித்தான். அதன்பின் ஸ்வீடன் முழுக்க ஒரே மாதிரி தாண்டா இருக்குனு நெடுமாறன் சொல்ல, அப்படி சொல்லாத வாக்கோ ஸ்வீடன்லயே அழகான இடம், கல்லூரி சுற்றி ஏரியும் ஏரியை ஒட்டியப்படி சின்ன அரண்மனையும் பெரிய கல்லூரி வளாகமும் எனக்கு தெரிஞ்சு வேற எங்கயும் இல்லன்னு சொல்லி உங்க போரஸ் எப்புடின்னு அசோக் கேட்க, அதற்கு நெடுமாறன் ரொம்ப பெரிய கல்லூரி வளாகம் இல்லைனாலும் ஊர் செம்ம அழகு என்று தான் வாழும் பகுதியை விட்டுகொடுக்காமல் பேசி முடித்தான். பிறகு சரிடா ரொம்ப நேரமா நடக்கிறோமே எப்போ உன் வீடு வருமுன்னு நெடுமாறன் கேட்க, இதோ அங்க தெரியுது பார் அது தான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து தங்கி இருக்கற வீடுன்னு அசோக் சற்றுத்தொலைவில் இருந்த வீட்டைக் காண்பிக்க. இதே மாதிரி தாண்டா எங்க வீடும் போரசில் இருக்கும்னு நெடுமாறன் சொல்லி முடித்து இருவரும் அசோக் வீட்டிற்குள் நுழைந்தனர்.



விட்டிற்குள் நுழைந்த பின்னர், என்னடா வீட்ல யாருமே இல்ல எல்லாரும் எங்க போய்ட்டாங்க என்று நெடுமாறன் கேட்க, இணைக்கு ஒரு பரீட்சை இருக்கு அதுனால எல்லாரும் கல்லூரிக்கு போயி இருகாங்க,எனக்கும் மதியம் தேர்வு இருக்கு நானும் மதியம் தேர்வுக்கு போகணும், நீ சாந்திரம் வரும் போது இருப்பாங்கனு சொல்லிவிட்டு சரி வேகமா சாப்டுட்டு பொறப்படு இல்லனா நேரம் ஆகிட்டா அதுக்கு வேற அப்புறம் அலையணும் என்று சொல்லிவிட்டு தனது "Facebook" பக்கத்தைப் பார்க்க அசோக் சென்றுவிட நெடுமாறனோ நேரத்தை பார்த்தபடி தனது உணவை வேகமாக முடித்துவிட்டு அசோக்கை கல்லூரிக்கு அழைத்தான். அதன் பின்னர் அசோகும் நெடுமாறனும் கல்லூரிக்கு நெடுமாறனின் மேற்படிப்பை பதிவு செய்ய புறப்பட்டனர். சிறிது நேரம் நடந்து சென்ற பின்னர், அசோக் திடிர் என்று நெடுமாறனிடம் இது தான் அப்பொழுது கூறிய சின்ன அரண்மனை என்று தன் கல்லூரிக்கு அருகில் ஏரியை ஓட்டியபடி இருக்கும் பழைய அரண்மனை ஒன்றை காண்பித்தான். அதை பார்த்த நெடுமாறன், டேய் உண்மையிலேயே அழகா இருக்குடா என்று ஒரு நிமிடம் மலைத்து நின்று வேடிக்கை பார்த்தான். அதன் பின் சிறிது தொலைவில் கல்லூரி நெருங்கிய போது, அசோக் நெடுமாறனிடம் குளிர்காலத்தில் இருகிறதவிட கோடையில் இன்னும் கல்லூரி அழகா இருக்கும்னு சொல்லி கல்லூரி வளாகத்தில் இருவரும் நுழைந்தனர்.



அதோ அங்க நிக்கிற எல்லாரும் அவங்கவுங்க படிப்பை பதிவு செய்ய தான் நிக்கிறாங்க, நீயும் போய் அவங்களோடு நின்னு பதிவு பண்ணிட்டு அப்படியே அறிமுக வகுப்புல கலந்துக்கோ என்றான் அசோக். அதை தொடர்ந்து, சரிடா என் தேர்வுக்கு மணியாச்சு இப்போ நான் கெளம்புறேன், எல்லாம் முடிச்சுட்டு எனக்கு ஒரு "S.M.S" அனுப்பிடு, நான் இங்க இருக்கற கணினி அறைக்கு என்னோட தேர்வை முடிச்சுட்டு வந்துடுறேன், அப்புறம் நீயும் என்னோட மற்ற நண்பர்களோடு ஊர் சுற்றிபார்போம் என்று சொல்லிவிட்டு தனது தேர்வுக்கு அசோக் கிளம்பினான். அதன்படியே நெடுமாறனும் போயி வரிசையில் தன் படிப்பை பதிவு செய்ய நின்று தன் படிப்பில் தன்னை பதிவு செய்து முடித்து விட்டு அறிமுக வகுப்பு எங்கு நடக்கிறது என்று கேட்டறிந்து அங்கு முனைந்தான். அங்கு அறிமுக வகுப்பு மாலை நான்கு மணி என்று தெரிவிக்க, சரி கல்லூரியை சுற்றி பார்போம் என்று கிளம்ப துரத்தில் இருந்து ஒரு பெண் குரல் நெடுமாறன் என்று அழைக்க, அந்த குரல் வரும் பக்கத்தில் அவனுக்கு இன்ப அதிரிச்சியாக காயத்ரி நின்று கொண்டிருந்தாள். இவன் ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்படியே மலைத்து நிற்க, காயத்ரி அருகில் வந்து, டேய் நெடுமாறா இங்க என்ன பண்ணுற, நீயும் இங்கதான் படிக்கிறியா என்று விசாரிக்க, நெடுமாறன் அதற்கு, இல்ல இல்ல இணைக்கு தான் பதிவு பண்ண வந்து இருக்றேன், இதுக்கு முன்னாடி நான் போரசில் படிச்சுட்டு இருந்தேன்னு சொல்லிவிட்டு, நீ எப்போ ஸ்வீடன் வந்த சொல்லவே இல்லன்னு கேட்க. அதற்கு அவள் நான் நேத்து காலைல தான் வந்தேன், இங்க இப்போ தான் படிக்க இடம் கெடச்சது, உன்னை இங்க பார்பேன்னு உண்மையா நினைக்கவே இல்லை தெரியுமா என்று தன் ஆச்சிரியத்தை வெளிபடுத்தினால். மேலும் நீ என்ன இங்க படிக்கிரனு கேட்க அதுக்கு எனக்கு இங்க "Industrial bio-technology" படிக்க இடம் கெடைச்சு இருக்குனு அவன் சொல்லி முடிக்க செரியாபோச்சி நானும் அத படிகத்தான் இங்க வந்து இருக்கேன், சரி பதிவு செய்தாச்சா என்று கேட்க இப்போதான் முடிச்சுட்டேன், நீ அப்படினு கேட்க, அவளும் இப்போதான் முடிச்சேன் என்று சொல்லி முடித்தாள்.

சரி இந்த முறை தவற விட கூடாதுனு நெனச்ச நெடுமாறன் மேலும் பேச்சு கொடுத்து எப்படியாவது இந்த முறை தன் பல நாள் காதலை வெளிபடுத்த நினைத்தான். அதன் தொடக்கமாக சரி இங்க யாரோட வந்து இருக்க, படிச்சு முடிச்சுட்டு இவ்ளோ நாள் என்ன பண்ணணு இவன் கேட்க, அதற்கு அவள் உனக்கு விஷயம் தெரியாதா எனக்கு போன வருஷம் கல்யாணம் நடந்துச்சு, என் கணவர் இங்க எரிக்சன் நிறுவனத்தில பணிப்புரிஞ்சுவறார், இப்போ தான் எனக்கு குடியுரிமை கெடச்சது சரி அப்படியே இங்க படிக்கலாம்னு தான் இந்த படிப்பை தேர்வு செய்தேன் என்று சொல்லி முடித்து நெடுமாறனின் காதல் கதைக்கு முற்று போட்டு முடித்தாள். அதை கேட்ட நெடுமாறன் தனது ஒருதலை காதலை தனது மனதிலேயே புதைத்து விட்டு மேற்கொண்டு பேச ஆரம்பித்தான். கடைசி வரை நெடுமாறனின் காதல் சொல்ல மறந்த காதலாகவே முடிந்தது....

இந்த சிறுகதை உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

எனது கிறுக்கல்கள் - பாகம் 1

நான் என் மனதில் கிடந்த பழைய குப்பைகளை கிளறியதில், என் மனம் என்னும் குழந்தை கிறுக்கிய சில கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு.

1 ) பிரம்பு கட்டையால் அடித்த வாத்தியார் என்றாலும், அவர் மூங்கில் கட்டையில் ஏறி செல்லும் பொழுது கண்கள் கலங்கத்தான் செய்கிறது.

2 ) கண் இமைக்கும் நேரத்தில் காற்றிலே மாயமாய் தொலைந்தது, அவள் எனக்கனுப்பிய ஈமெயில் காதல் கடிதங்கள். ஆனால் ஏன் அவள் நினைவுகள் என் இதய ஹார்டிஸ்கில் அழிந்து போக மறுக்கிறது!

3 ) புதியதாய் ஒருவன் தன்னை ஏறி மிதித்தால், உயிரில்லா செருப்பும் கூட தன் கோபத்தை காண்பிக்க கடிக்கிறது. ஏன் இந்த உயிருள்ள மனிதன் மட்டும் தன்னை ஏறி மிதித்தவனிடம் ஐந்து ஆண்டு காலம் தன்னையும் தன் தேசத்தையும் அடிமையாக கொடுத்து ஊழல் செய்ய விடுகிறான்!

4 ) ஒரு பாட்டரி தந்த எனக்கு இந்த கடிகாரம் 24 மணி நேரமும் அயராமல் தன்னால் முடிந்த வரை நேரம் காட்டுகிறது. ஆனால் ஏன் இந்த அரசியல் தலைவர்கள் நான் தந்த ஒரு வோட்டுக்காக எனக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறார்கள்!

5 ) தனக்கு வரும் கட்டளைகள் எந்த மொழியில் இருந்தாலும் தன் தாய் மொழியான பைனரி மொழியில் மாற்றி வேலைகள் செய்யும் இந்த உயிரில்லா கணினியின் அறிவு, ஏன் இந்த தாய் மொழி மறந்த தமிழ் கணினி மேதைகளுக்கு இல்லை.

6 ) இருபத்தி நான்கு மணி நேரமும் சுழன்று மணி காட்டிக் கொண்டு வேலை செய்யும் கடிகாரம் கூட தன்னிடத்தில் பதிரெண்டு மணி நேரம் தான் வைத்து உள்ளது. ஆனால் ஏன் இந்த அரசியல் பெரிச்சாளிகள் மட்டும் தன் தேவைக்கு அதிகமாக பணம் வைத்து உள்ளனர்

7 ) உனக்கென்று ஒன்றும் இவ்வுலகில் இல்லை என்று சொல்லத்தான், இறைவன் நம்மை இந்த புவியில் நிர்வாணமாய் பிறக்க வெய்த்தானோ.

8 ) இவ்வுலகில் நடக்கும் தீயவை கேட்காமல் இருக்க, கண்ணுக்கு இமை தந்தாற்போல் காதிற்கும் ஏதேனும் தந்து என்னை படைக்காமல் விட்டது ஏன் இறைவா!

9 ) இவன் யார் என் ரத்த சம்பந்தமா, வெங்காயம் வெட்டினால் எனக்கு ஏன் கண்ணீர் வருகிறது! (இது எங்கோ கேட்ட மாதிரியும் உள்ளது)

10 ) குரங்கிற்கும் மரத்திற்கும் உள்ள தொடர்பு, குரங்கில் இருந்து வந்த மனிதனுக்கும் இருக்கிறதோ என்னவோ. ஏன்னென்றால் மனிதன் இப்பொழுதும் பேருந்தில் உள்ள மரப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டுத் தான் செல்கிறான்.

இது வெறும் தொடக்கம் தான், இன்னும் என் மனம் கிறுக்கும் கிறுக்கல்கள் முடியவில்லை...

இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

வட போச்சே - சிறுகதை

"இந்த கதை மற்றும் கதையில் வரும் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே, யார் மனதையும் புண்படுத்த அல்ல"

இடம்: மேல் மருவத்தூர் பேருந்து நிலையம்
மணி: மாலை 4
நாள்: ஒரு நல்ல நாள்

சென்னைக்கு அடுத்த பஸ் எப்போ வரும் என்று கேள்வி எழுப்பியவாறு தெருவோர டீ-கடைக்குள் நுழைந்தான் நெடுமாறன். இவன பத்தி சொல்லணும்னா வயது 24, சென்னையில் உள்ள ஒரு தனியார் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறான். விடுமுறை நாள், சரி அம்மன் அருள் பெற்று ப்ராஜெக்ட் மேனேஜர் ஆகிடனும் அப்படினு ஒரு நினைப்புள்ள மேல் மருவத்தூர் கோவிலுக்கு விடியற் காலைல கெளம்பி அம்மன் தரிசனம் முடிச்சுட்டு பிறகு அன்னதானம் புண்ணியத்துல மதிய உணவ முடிச்சுட்டு சென்னைக்கு போக இப்போ பேருந்து நிலையத்துல காத்துட்டு இருக்கான். சரி சரி கதைக்கு போவோம், நெறைய இவன பத்தி சொல்லிட்டேன்.

ஹ்ம்ம்ம் எங்க விட்டேன், சென்னைக்கு போக எத்தன மணிக்கு அடுத்த பஸ்னு கேட்டுகிட்டே தெருவோர டீ-கடைக்குள் நுழைந்தான் நெடுமாறன். அதுக்கு டீ-கடைக்காரர், எப்பவும் இன்னாத்திக்கு ஒரு பஸ் பூடும், என்னனு தெரில இம்மாம் நேரம் ஆகியும் ஒன்னும் காணல என்று சொல்லி அவர் வேலையை தொடர்ந்தார். நேஷனல் ஐவேஸ் உற்று நோக்கிய பின்பு மீண்டும் நெடுமாறன் டீ-கடைக்காரரிடம் இப்புடி தான் எப்பவும் ரோட்ல வண்டி இல்லாம இருக்குமானு கேக்க, அதுக்கு அவர் இல்ல இல்ல எப்பவாவது யாராச்சும் அரசியல் தலைவருங்கோ இப்புடிக்கா போன்னா கொஞ்சம் நேரத்துக்கு வண்டில்லாம் இல்லாம கெடக்கும், அப்பால மொத்த வண்டியும் அவர் போன்ன பின்னால போவும்னு சொல்லி முடிச்சாரு. ஓஹோ அப்படியானு கேட்டுட்டு செரிங்கனா ஒரு டீ போடுங்க அப்படியே இந்த வடை எடுத்துகுறேன்னு சொல்லி முடிச்சான் நெடுமாறன்.



வடை சாப்டுட்டு இருந்த நெடுமாறன் அங்க இருந்த நாளிதழ் விளம்பரத்தில் உள்ள எதிர்க்கட்சி விளம்பரத்தை வடையும் கையுமா பாத்துகிட்டு இருந்தான். அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவர்க்கும் குளிர்சாதன பெட்டி இலவசம் என்று பார்த்து எரிச்சல் அடைந்தான். ஏன் என்றால், இந்த ஆட்சியில் தரும் இலவச தொலைக்காட்சி இவன் வசிக்கும் இடத்திற்கு வரவில்லை. அந்த எரிச்சலை வெளிக்காட்டமல் டீ-கடைக்காரரிடம் உங்க ஏரியால இலவச டிவி தந்துடாங்கலானு கேட்க அவரோ இப்பதான்பா தேர்தல் வருதுனு குடுத்தாங்க என்று தொடர்ந்து, ஏதோ இந்த அம்மா வந்தா "Fridge" தராங்கலாமே பாப்போம்னு சொல்லி டீ ரெடி சார்'நு டீ-கப்ப நெடுமாறனிடம் தந்து அவர் வேலையை தொடர்ந்தார். ஹ்ம்ம் என்று உள்ளுக்குள் எரிச்சலுடன் கூடிய பெருமூச்சுடன், டீ பருக ஆரம்பித்தான்.

சற்று தொலைவில் "siren" ஒலி கேட்க, என்ன நடக்கிறது என்று பார்க்க ஆர்வத்தோடு "siren" ஒலி வரும் திசை நோக்கியவாறு டீ'யும் பருகி கொண்டு பார்த்து கொண்டிருந்தான். சிறிது தொலைவில் மிகுந்த வேகத்துடன் "siren" பொருத்திய வாகனங்கள் வர, விழி மூட மறந்து நெடுமாறனும் அங்கு குடி இருந்தவர்களும் எந்த அரசியல் தலைவர் வர்ராருன்னு பாத்துகிட்டு இருக்கும் பொழுது பாக்கெட்டில் இருந்த கைபேசி அமைதியாக அழைப்பு வருவதை தெரிவிக்க கிச்சு கிச்சு மூட்ட(vibrate mode), அதை பெரிது படுத்தாமல் மீண்டும் வாகனம் வரும் திசையை உற்று நோக்கி கொண்டிருந்தான், கண் இமை இமைபதற்குல் முதலில் நான்கு காவல் துறை வாகனங்கள் மின்னலென சிறி பாய பின்னால் ஆளும் கட்சியின் குண்டர் மன்னிக்கவும் தொண்டர் படை சூழ ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து வர. என்ன நடக்கிறது என்று தெரியாமல் குடி இருந்த அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.



நெடுமாறனும் எந்த தலைவர்டா இது, ஒன்னுக்கு மேல ஆம்புலன்ஸ் போகுது அப்படினு யோசிக்கும் பொழுது மீண்டும் அவன் கைபேசியில் குறுந்தகவல் அழைப்பு மணி அடிக்க, அதில் இருந்த செய்தி அவனின் இதய துடிப்பை அதிகரித்தது. அது அவனுடன் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் இருந்து வந்த குறுந்தகவல். அது என்னவெனில் திண்டிவனம் அருகில் நடந்த மிக பெரிய ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் அணைத்து ஆளும் கட்சியினரும் இறந்து விட்டதாகவும். மேலும் மதுரையில் நடந்த மிக பெரிய எதிர் கட்சியினர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் அணைத்து எதிர் கட்சியினரும் இறந்து விட்டதாகவும். நாடே இப்பொழுது கலவரத்தில் தீப்பற்றி எரிகிறது என்றும், நீ முடிந்தால் கோவிலிலேயே இன்று பாதுகாப்பாக தங்கிக்கொள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் நெடுமாறனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.

அதற்கு காரணம்........ "ச்ச இலவச தொலைக்காட்சியும் போச்சு , இலவச குளிர்சாதன பெட்டியும் போச்சே"

மொத்தத்தில் வடை போச்சே...
:(.....



இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால், மறக்காமல் இன்ட்லி மற்றும் தமிழ் மணமில் உங்கள் வோட்டை போடுங்கள். மேலும் உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

Sunday, March 13, 2011

நன்றி உரை!!!

நான் குணசேகர், ஸ்வீடனில் இருந்து இந்த வலைபதிப்பை தொடங்கி உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இதுவரை தேர்வில் மட்டும் கதை எழுதி கொண்டு இருந்த நான், முதல் முறையாக ஒரு சோதனை முயற்சியாக இந்த கிணற்று தவளை வலைப்பதிப்பை தொடங்கி உள்ளேன். இந்த "கிணற்று தவளை" வலை பதிப்பின் முலம் எனக்கு பிடித்தவை , சந்தித்தவை, பாதித்தவை, கற்றதை மற்றும் பல நிகழ்வுகளை பதிவு செய்யவும் மற்றவர்க்கு சென்று சேர்க்கவும் இதை தொடங்கி உள்ளேன். இந்த வலைபதிப்பை காண வரும் அனைவர்க்கும் என் நெஞ்சார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு உங்கள் தோழன்,
குணசேகர் குமார்